ராஜகிரி: உங்கள் பிள்ளை பத்தாம் வகுப்பு படிக்கின்றதா? அவர்களது எதிர்காலம் குறித்து திட்டமிடும் நேரம் இதுவே!!
ராஜகிரி: உங்கள் பிள்ளை பத்தாம் வகுப்பு படிக்கின்றதா? அவர்களது எதிர்காலம் குறித்து திட்டமிடும் நேரம் இதுவே!!
"பத்து வரை படிப்பு பின் பாஸ்போர்ட் எடுப்பு,செத்து செத்து பிழைப்பு
சேர்த்து வைத்ததை எல்லாம்செலவ்ளித்து அழிப்பு"என்று வாழ்ந்த காலம் மலையேறிவிட்டது. வளைகுடா நாடுகளின் கதவுகள் நமக்கென திறந்தகாலம் இன்று இறந்த காலம் ஆகிவிட்டது. "எப்படியும் எம்புள்ள பொழச்சுக்குவான்" என்ற பெற்றோர்களின் நினைப்பு பெரும்பாலும் வெளிநாட்டு வருமானத்தை எதிர்நோக்கிய நினைப்பேயாகும். நம்புங்கள், வளைகுடா இனிமேலும் நமக்கென வளைந்திடா.
இக்கால நிலை என்ன?
இனிமேலும் அத்தகைய நிலை தொடர வேண்டுமா? என் வீட்டிலும், உங்கள் வீட்டிலும் இருக்கின்ற குழந்தைகளின் எதிர்காலத்தை திட்டமிட இதுவரை முனைந்திருக்கின்றோமா? குறைந்த பட்சம் 'திட்டமிடவேண்டும்' என்றாவது நினைத்திருக்கின்றோமா? நம் எதிர்கால சந்ததிகள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை சிந்திக்க வேண்டிய கட்டத்தில் உள்ளோம்.
கல்வியாண்டில் இது கடைசி பருவம். மாணவர்களுக்கு 'ஆண்டுப் பரீட்ச்சை' நெருங்கும் நேரம். நம்மூரில் உயர்நிலை (பத்தாம்) வகுப்பில் பயிலும் மாணவர்களில் 98% சதவிகித மானவர்களுக்கு அடுத்து என்ன செய்யப்போகின்றோம் என்ற தெளிவு, இல்லை இல்லை, சிந்தனை கூட இல்லாது படிக்கின்றனர்.
"
அடுத்து என்ன படிக்கப் போகிறாய்" என 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவனைக் கேட்டால் "ப்ளஸ் ஒன் தான்" என்கிறான் கேலியாக!! சரி 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவனது பெற்றோரிடம் அடுத்து உங்க மகன்/மகளை என்ன படிக்க வைக்கப் போகிறீர்கள் எனக் கேட்டால், அதே பதிலே வருகிறது. இது நகைச்சுவையாகத் தோன்றலாம். உண்மையில், தன் மகனை/மகளை பதினொன்றாம் வகுப்பில் எந்த பிரிவில் சேர்த்துவிடப் போகின்றோம் என்கிற சிந்தனைக் கூட அவர்களுக்கு வந்திருக்காது.
எங்கே நாம் இலக்கைத் தவறவிடுகின்றோம்?
இப்படி இலக்கற்று வாழுகின்ற மாணவன் இறுதியில் என்ன பிரிவில் சேருகின்றான் என்று பார்த்தால், தன்னுடைய நண்பன்/தோழி எந்தப் பிரிவில் சேருகின்றானோ/ளோ அந்த பிரிவில் தான் இவன்/ளும் சேருகின்றான்/ள். "ஏன் இந்த பிரிவை படிக்கின்றாய்" எனக் கேட்டால், "அதான் தேவலை" என்பார்கள். "தேவலை" என்பதற்கு இன்று வரை யாருக்கும் அர்த்தம் விளங்கியதாய் எனக்குத் தோன்றவில்லை. இதற்கு அவர்களைச் சொல்லி ஒன்றும் குற்றம் இல்லை. நான் படிக்கும் போது கூட, பி.எஸ்.சி என்பது ஒரு பட்டப்படிப்பு என்று தான் தெரியுமே ஒழிய, அதில் கணிதம், கணிணி அறிவியல் என உட்பிரிவுகள் இருக்கும் என, கல்லூரியில் சேர்கைக்காக போகின்ற வரைக்கும் எனக்குத் தெரியாது. இன்றளவும் உண்மை இது தான். இந்நிலை இனிமேலும் தொடர வேண்டாம்.
மருத்துவப் படிப்பில் பட்டதாரி ஆக வேண்டுமானால் பதினொன்று/பனிரெண்டாம் வகுப்புகளில் கணிதம் மற்றும் உயிரியல் (Biology) படித்திருக்க வேண்டும் என்னும் அடிப்படை அறிவு, பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு இருத்தல் அவசியம். சரி, என்ன செய்ய வேண்டும்?
இவையாவற்றுக்கும் அடிப்படை திட்டமிடுதலே ஆகும்.
1) உங்கள் குழந்தை என்னவாக வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும், ஆனால் நீங்கள் மட்டும் முடிவு செய்யாதீர்கள். உங்கள் மகன்/மகளோடு நெருங்கிப் பழகி, மனம் விட்டு பேசி, அவன்/அவளுக்கு ஆர்வம் இருக்கும் துறையைக் கண்டறியுங்கள்.
2) அவர்கள் குழப்பத்தில் இருந்தார்களானால், எதிர் கால நோக்கோடு நீங்கள் ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து, அதில் உங்கள் மகன்/மகளுக்கு ஆர்வமூட்டுங்கள்.
3) முடிவு செய்யப் பட்ட துறை சார்ந்த தகவல்கள், வேலைவாய்ப்பு, உயர் பதவிகள் உள்ளிட்ட தகவல்களைச் சேகரிக்கத் துவங்குங்கள்.
4) கல்வியில் மூத்த சான்றோர்கள் நம்மூரில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள். தேவைப்படுக்கின்ற நேரத்தில் ஆலோசனை வழங்கவும், வழி காட்டவும் அவர்கள் என்றைக்கும் தயக்கம் காட்ட மாட்டார்கள். இது நிச்சயம். அத்தகையவர்களை நாம் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். நம்மூரில் வாழும் பள்ளி,கல்லூரி ஆசிரியர்களைச் சந்தித்து, நீங்கள் தெரிவு செய்து வைத்திருக்கும் துறைசார்ந்த விஷயங்களை கேட்டறியுங்கள். நிச்சயம் ஒரு தெளிவு பிறக்கும்.
உரிய நேரத்தில் திட்டமிடுதலும், அதனை செயல் முறைப் படுத்துதலும் இன்ஷா அல்லாஹ் நம்மூரில் நடக்கத் தொடங்கினால், நமதூரின் கல்வி முன்னேற்றத்திற்குஇதுவே போதுமானதாகும்.
பயனுள்ள கல்வியைப் பெற்று, நாமும் நமது சமுதாயமும் பயனுறும் படி வாழ நம் எல்லோருக்கும் அல்லாஹ் அருள் செய்திடுவானாக, ஆமீன்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக