ராஜகிரி :பெற்றோருக்கு பெரும் சவால் விடும் பள்ளி மாணவர் சேர்ப்பு
ராஜகிரி :பெற்றோருக்கு பெரும் சவால் விடும் பள்ளி மாணவர் சேர்ப்பு
பொறியியல், மருத்துவப் படிப்புக்குக்கூட கல்லூரிகளில் எளி தாக இடம் கிடைத்துவிடும் போலிருக்கிறது. ஆனால், எல்கேஜி முதல் பிளஸ் 1 வரையிலான வகுப்புகளுக்கு தங்கள் பிள்ளைகளுக்கு இடத்தைப் பிடிக்க மிகுந்த சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின்னர் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் செவ்வாய்க்கிழமையும், தனியார் பள்ளிகள் புதன்கிழமையும் திறக்கப்பட்டன.
கோடை விடுமுறையை மாணவ, மாணவிகள் உற்சாகமாகக் கழித்திருக்கலாம். ஆனால், அவர்களது பெற்றோர்கள்தான் பெரும் சிரமத்துக்கு உள்ளாகிவிட்டனர். பள்ளிகளில் விண்ணப்பம் பெறுவது முதல், அலையாய் அலைந்து திரிந்துதான் பள்ளிகளில் சேர்க்கையை முடித்துள்ளனர்.
வீட்டிலிருந்து காலை டிபன், மதிய உணவு எடுத்துச் சென்று சாப்பிட்டு, தங்கள் பிள்ளைகளுக்காக விண்ணப்பங்களை வாங்கி வந்தனர் சிலர்.
கால் வலிக்க நின்று விண்ணப்பங்களைப் பெற்றவர்கள், அடுத்து சேர்க்கைக்காக பள்ளிகளில் அலைந்த அவலம் இன்னும் சற்று அதிகமாகவே இருந்தது.
தங்கள் பிள்ளைகளை குறிப்பிட்ட பள்ளிகளில்தான் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்திலோ என்னவோ, பல பெற்றோர்கள் அந்தப் பள்ளிகளில் தவமிருந்ததைப் பார்க்க முடிந்தது.
பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தக்கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், பெரும்பாலான பள்ளிகளில் பிரீ.கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி. சேர்க்கைக்காக (!) அந்தக் குழந்தைகளுக்கு நுழைவுத் தேர்வுகள் வைக்கப்பட்டன.
சில பள்ளிகள் 6, 9 ஆம் வகுப்புகளில் சேர்க்கைக்காகவும் நுழைவுத் தேர்வுகளை நடத்தின. இதில் குறிப்பிட்ட அளவு பேர் "வடிகட்டப்பட்டு' திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
10-ம் வகுப்பில் குறிப்பிட்ட அளவு மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு மட்டுமே பிளஸ் 1 வகுப்பில் இடம் கிடைத்தது. பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு அவர்கள் படித்த அதே பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் இடம் வழங்காத அவலமும் சில பள்ளிகளில் நிகழ்ந்தன.
அரசு உத்தரவின்படி, அந்தப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கோ அல்லது மாணவிக்கோ இடம் வழங்கிய பின்னர் அடுத்தப் பள்ளிகளிலிருந்து வருபவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். ஆனால், இவற்றை பல பள்ளிகள் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை.
நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி தனியார் பள்ளிகளுக்குக் கட்டணம் நிர்ணயித்தது. ஒவ்வொரு பள்ளிக்கும் இவ்வளவு கட்டணம் என்று நிர்ணயிக்கப்பட்டாலும் அதை, மிகச்சரியாக எந்தப் பள்ளியிலும் பின்பற்றப்பட்டதாகத் தெரியவில்லை.
மே முதல் வாரத்திலேயே சேர்க்கையை முடித்துவிட்ட சில பள்ளிகள் சென்ற ஆண்டில் வசூலித்த தொகையைவிட சற்றுக் கூடுதலாகவே கட்டணம் வசூலித்து இருக்கின்றன.
நகர்ப்புறங்களிலும், அதையொட்டியுள்ள பள்ளிகளிலும் பொறியியல் படிப்புக்கு இணையாக கட்டணங்கள் வசூலிக்கப்பட்டுள்ளன.
புகார் தெரிவிக்குமாறு அரசு கூறினாலும் எந்தப் பெற்றோரும் புகார் தருவதில்லை. அப்படித் தந்தாலும், அந்தப் பள்ளிகளுக்கு அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினால் ஏதோ ஒன்றைச் சொல்லி சமாளித்து விடுவதாகத் தெரிகிறது.
மேலும், இன்றைக்கு அரசுப் பள்ளிகள் எல்லாம் நல்ல தேர்ச்சி விழுக்காட்டைப் பெறுகின்றன. மாணவ, மாணவிகளும் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வருகின்றனர். ஆனால், குறிப்பிட்ட பள்ளியில் சேர்த்தால்தான் பிள்ளைகள் அதிக மதிப்பெண்கள் பெறுவார்கள் என்ற எண்ணம் பெற்றோரிடம் மேலோங்கி உள்ளது.
எல்லாப் பள்ளிகளும் நல்ல பள்ளிகள்தான். எல்லா மாணவர்களும் நல்ல மாணவர்கள்தான். ஆசிரியர்கள் சொல்லித் தந்தாலும் அதை படிக்கும் மாணவ, மாணவிகளைப் பொறுத்துதான் மதிப்பெண்கள் பெற முடியும்.
இதை உணராமல் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட பள்ளிகளில்தான் தங்களைப் பிள்ளைகளைச் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தால், அதற்காக பெற்றோர் படும்பாடு ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.
மாற்று- அரசுப் பள்ளிகள் மேம்பாடு மட்டுமே: ஒவ்வொரு திட்டத்துக்கும் ஆண்டுக்கு இவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்வதாகக் கூறும் அரசு, கல்வித் துறைக்கு அதிகமாகவே நிதியை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அரசுப் பள்ளிக் கட்டடங்கள் அனைத்து வசதிகளுடனும் இருக்க வேண்டும். ஊதியத்தை உயர்த்தியது போல ஆசிரியர்களின் கல்வி கற்பிக்கும் தரத்தை மேலும் உயர்த்த வேண்டும். தனியார் பள்ளிகளுக்கு நிகரான அனைத்து வசதிகளையும் அரசுப் பள்ளிகளிலும் ஏற்படுத்தவேண்டும். மாணவர்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை பள்ளிகள் செய்து தருகின்றனவா என்பதை அரசு கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் பெற்றோர்கள்விண்ணப்பிப்பதே சாதனை:ஏப்ரல் மாத இறுதியிலும் மே மாத முதல் வாரத்திலும்தான் விண்ணப்பங்களை பள்ளிகள் வழங்கின. இந்த விண்ணப்பங்களைப் பெற, காலை 6 மணிக்குச் சென்றவர்கள் பிற்பகல் 1 அல்லது 2 மணிக்குத்தான் விண்ணப்பங்களை வாங்கக்கூடிய அளவுக்கு பள்ளிகளில் பெருங்கூட்டம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக