ராஜகிரி : பெட்ரோல்,டீசல்,சமையல் எரிவாயு விலைஉயர்வு: விலை கட்டுப்பாடு நீக்கம்
ராஜகிரி : பெட்ரோல்,டீசல்,சமையல் எரிவாயு விலைஉயர்வு: விலை கட்டுப்பாடு நீக்கம்
பெட்ரோலியப் பொருள்கள் விலை நிர்ணயத்தில் இந்திய மக்களுக்கு பயங்கர அதிர்ச்சியைத் தந்துள்ளது மத்திய அரசு.
பெட்ரோல், டீசல் விலையை இனி எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயிக்கும். அதாவது பெட்ரோல்- டீசல் விலை சர்வதேச மார்க்கெட் விலைக்கு உயர்த்தப் போகின்றன எண்ணெய் நிறுவனங்கள்.
முதல்கட்டமாக, இப்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.73 உயர்த்தப்பட்டுள்ளது.
டீசல் விலை லிட்டருக்கு ரூ.2ம், சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.35ம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் இனி பெட்ரோல், டீசல் விலைகள் சர்வதேச மார்க்கெட் நிலைமையைப் பொறுத்து தினந்தோறும், வாரந்தோறும் உயரும் அல்லது குறையும்.
சமையல் எரிவாயுவைப் பொறுத்தவரை 14.2 கிலோ சிலிண்டருக்கு மத்திய அரசு இப்போது ரூ. 262 மானியம் அளித்து வருகிறது. இதனால் நமக்கு சிலிண்டர் ரூ. 325க்குக் கிடைக்கிறது. ஆனால், அதன் உண்மையான விலை ரூ. 587 ஆகும்.
இந் நிலையில் இப்போது இதன் விலையை ரூ. 35 மட்டும் உயர்த்தியுள்ளது மத்திய அரசு. அதன் விலைக் கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்கினால் விலை இரண்டு மடங்கை விட அதிகமாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மண்ணெண்ணெயின் விலையையும் லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தியுள்ளது மத்திய அரசு. சர்வதேச விலை நிலவரப்படி மண்ணெண்ணெய் விலையை லிட்டருக்கு ரூ. 18.82 உயர்த்தியாக வேண்டும்.
ஆனால், ஏழைகளை பாதிக்கும் என்பதால், இதன் விலையை சர்வதேச விலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி தரவில்லை. மண்ணெண்ணெய் விலையை மட்டும் மத்திய அரசு தொடர்ந்து கட்டுப்படுத்தும்.
2002ம் ஆண்டு்க்குப் பின் மண்ணெண்ணெய் விலையை மத்திய அரசு உயர்த்துவது இதுவை முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விலை உயர்வுகள், கட்டுப்பாட்டை நீக்குவது ஆகியவை குறித்து கிரீத் பாரிக் கமிட்டி சில மாதங்களுக்கு முன்பே மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துவிட்டது. ஆனால், இது குறித்து முடிவெடுக்க அமைக்கப்பட்ட அமைச்சர்கள் கூட்டத்தில் திமுக, திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் தொடர் எதிர்ப்பால் விலை உயர்வு ஒத்தி போடப்பட்டு வந்தது.
இந் நிலையில் இன்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை, பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா சந்தித்துப் பேசியதையடுத்து விலை உயர்வை அமலாக்க இறுதி முடிவு எடுக்கப்பட்டுவிட்டது.
இனி இவற்றின் விலைகளை குறைக்க வேண்டும் என்றால், பெட்ரோல், டீசல் மீது மாநில அரசுகள் விதிக்கும் வரிகளைத் தான் குறைத்துக் கொள்ள வேண்டும் தியோரா சில தினங்களுக்கு முன் முதல்வர்களுக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.
விலைக் கட்டுப்பாட்டை மத்திய அரசு கைவிட்டுவிட்டதால், இனிமேல் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு வேண்டியது மாநில அரசுகளே என்ற நிலை உருவாகிவிட்டது.
இந்த விலை உயர்வுகள் அதிகாரப்பூர்வமாக இன்று இரவு முதலே அமலுக்கு வருகிறது. அதற்கு முன்பே பெட்ரோல் பங்குகளில் விலையை கூட்டிவிட்டனர்.
இப்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை பீப்பாய் 77 டாலர் என்ற நிலையில் உள்ளதால் பெட்ரோலை லிட்டருக்கு ரூ. 3.73ம், டீசலை ரூ. 3.80ம் உயர்த்த வேண்டிய நிலை உள்ளது. ஆனால், பெட்ரோலை சர்வதேச நிலவரத்துக்கு ஏற்றவாறு உயர்த்தியுள்ள மத்திய அரசு டீசலை ரூ. 2 மட்டும் உயர்த்தியுள்ளது.
டீசல் விலையை இன்னும் அதிகமாக்கினால் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் அதிகமாகிவிடும் என்பதால் மத்திய அரசு அதை கொஞ்சம் மட்டுமே உயர்த்தியுள்ளது. ஆனால், விரைவில் அந்த விலைக் கட்டுப்பாட்டையும் மத்திய அரசு நீக்கலாம் என்று தெரிகிறது. இதனால் டீசல் விலை விரைவிலேயே மேலும் உயரலாம்.
இப்போது பெட்ரோல், டீசல் மீதான மானியங்களை மத்திய அரசு நீக்கி விலையை உயர்த்தியுள்ளதால் மத்திய அரசுக்கு நாளொன்றுக்கு ரூ. 200 கோடி வரை மிச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கூட்டணி அரசு இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை என்ற வகையில் எடுத்துள்ள மிக முக்கியமான முடிவு இதுவாகும்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை 77 டாலரைவிட அதிகமாகி 100 டாலரை தாண்டும் நிலை வந்தால் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை மிகக் கடுமையாக உயரக் கூடும்.
இனிமேல் பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச பெட்ரோலிய எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்திய எண்ணெய் நிறுவனங்களே முடிவு செய்து கொள்ளவும், விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தலையிடுவதில்லை என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக