விமான நிலைய விவரங்கள்

விமான நிலைய வருகை புறப்படு விவரங்கள் http://indiaairport.blogspot.com/

ராஜகிரி ஆன்லைன்'s Facebook

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

வெற்றிக்கு வழிகள் - பகுதி-2 - திட்டமிடுதல்

planning
ஆற்றில் கொட்டினாலும் அளந்து கொட்டு’ “ஆழம் தெரியாமல் ஆற்றில் கால் வைக்காதே’ என்பார்கள். இது நமக்கு உணர்த்தும் பாடம், எந்தச் செயலைச் செய்தாலும், நன்குதிட்டமிடப்பட்ட செயல் திட்டம் தேவை என்பதாகும். அதை எப்படி செயல்படுத்த வேண்டும், அதைச் செயல்படுத்தும் போது நாம் எதிர்கொள்ளக் கூடிய பிரச்சனைகள் என்ன? அவற்றை எப்படிச் சமாளிப்பது? விலக்குவது? என்பதைப் பற்றித் தீவிரமாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்தால், நமது செயல் திட்டம் இடையூறின்றி நன்கு நிறைவேறும். இந்தத் திட்டமிடுதல் நமக்கு மனநிறைவையும், திட்டத்தைச் செய்து முடித்த பின் திருப்தியும், மகிழ்ச்சியும் ஏற்படும்.

அவசர கோலத்தில் அள்ளித் தெளித்த கோலமாய் நமது செயல்கள் அலங்கோலமாக இருந்தால் எப்படி நிறைவேறும்?

சொந்த வீடு கட்டவேண்டும் எவ்வளவு காலத்திற்கு வாடகை வீட்டிலேயே குடியிருப்பது என்று எண்ணுகிறோம். நமக்கென்று சொந்த வீடு இருந்தால் தான் நன்றாக இருக்கும் கௌரவ மாகவும் வாழலாம் என்று நினைக்கிறோம். இப்போதெல்லாம் குடியிருப்புகள் பற்றி HOUSE PROMOTERS பத்திரிகைகளில் பரவலாக விளம்பரம் செய்திருக்கிறார்கள்.

முன்பின் தீர யோசிக்காமல் அவர்களது விளம்பரத்தைப் பார்த்து முன்பணம் கட்டி விட்டு, பின் அது சரியில்லை இது சரியில்லை என்று குறைப்பட்டுக் கொள்வதால் என்ன பயன்?

விளம்பரம் செய்யப்பட்ட குடியிருப்புகள் தரமானவைதானா? தண்ணீர் வசதி காற்றோட்ட வசதி, நமது வருமானத்திற்கு ஏற்றது தானா? முறையாகப் பணம் கட்டியபின் வீட்டின் கிரயப் பத்திரம் நமக்குக் கிடைக்குமா? நகராட்சி அல்லது மாநகராட்சி அல்லது மாநகராட்சி நகர குடியிருப்புத் துறையின் முறையான அங்கீகாரம் பெற்றது தானா? என்பதையெல்லாம் தீரவிசாரித்த பின் சொந்த வீடு வாங்க முயற்சி செய்தால் பலன் தரும். குடியிருப்பு வசதி நூறு வளங்கள் பற்றி செய்தித் தாள்களில் வரும் செய்தி நம்மைத் திடுக்கிடவே வைக்கிறது.

ஆக திட்டமிடுதல் மிக, மிக அவசியம். இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் தீர்க்கமாக

ஆலோசித்து திட்டமிட்டுச் செயல்படுவதே நன்மை பயக்கும். நமது செயல் வெற்றி பெறுவதும், தோல்வியடைவதும் நாம் மேற் கொள்ளும் திட்டத்தைப் பொறுத்தே அமையும். எந்தச் செயலானாலும் கீழ்க் கண்ட சில நியதிகளை நாம் நன்கு ஆலோசிக்க வேண்டும்.

அடுத்து எது முக்கியமானது (IMPORTANT). முன்னுரிமையுடன் நிறைவேற்ற வேண்டிய (PRIORITY) பணி என்ன? அவசரமாக கவனிக்க வேண்டியது (URGENT) என்ன என்பது பற்றி ஆலோசித்து முடிவு செய்யுங்கள்.

சிலவற்றை முன்னுரிமையுடன் உடனுக் குடன் செய்யாமல் காலதாமதம் செய்தால் நமக்கு நஷ்டமே. முன்னுரிமையுடன் கவனிக்க வேண்டியவை முக்கியமாக கவனிக்க வேண்டியவை அவசரமாகச் செய்து முடிக்க வேண்டியவை என்பதை நன்கு தீர்மானம் செய்து கொள்ளுங்கள்.

முக்கியமாகச் செய்து முடிக்க வேண்டி யதற்கும், முன்னுரிமையுடன் செய்து முடிக்க வேண்டியதற்கும் வித்தியாசம் உண்டு. முன்னுரிமையுடன் கவனிக்க வேண்டியதைத் தள்ளிப் போட முடியாது. ஆனால், முக்கிய மாகச் செய்ய வேண்டியவற்றை சற்றுக் காலம் தாழ்த்திச் செய்வதால் நஷ்டமில்லை. ஆகவே அதற்காக அவசரப்பட வேண்டாம்.

ஆக முன்னுரிமை, முக்கியம், அவசரம் என்பதை நன்கு ஆலோசித்துச் செயல்படுவதே நல்லது. திட்டமிடும் போது ஏற்படக்கூடிய சிரமங்கள், எதிர் கொள்ள வேண்டிய பிரச்சனை களை அலசிப் பார்த்து, தோல்விகளிருந்து பாடம் கற்றுக் கொண்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

வருடம் வருடம் மத்திய மாநில அரசுகள் தங்கள் வருவாய் இவ்வளவு, செலவினங்கள் என்னென்ன எவ்வளவு நிதியை ஒதுக்க வேண்டும், நிதி ஆதாரங்கள் என்ன? எப்படி வருவாயை ஈட்டுவது, பற்றாக்குறை பட்ஜெட்டை எப்படி சரி செய்வது என்று வரவு, செலவு திட்ட அறிக்கையை (ANNUAL STATEMENT) சமர்ப்பிக்கின்றன.

அது போல குடும்ப பட்ஜெட்டும் மிக, மிக முக்கியமானது. ஆடம்பரத்திற்காகவோ, மற்றவர்கள் நம்மைப் பாராட்ட வேண்டும் என்றோ தாம் தாம் என்று செலவு செய்து விட்டு அவதிப்படுவோர் பல பேர். வருவாய்க்குத் தக்கபடி செலவு செய்பவர்களே புத்திசாகள்.

பெண்ணுக்குத் திருமணம் நிச்சயம் செய்கிறோம். இந்நாளில் முதலில் திருமண மண்டபத்திற்கு அட்வான்ஸ் கொடுத்த பின்பு திருமண தேதியை நிச்சயம் செய்ய வேண்டி யிருக்கிறது. பெண்ணுக்கு நல்ல வரனாகப் பார்த்து கணவன் அவளை வைத்து நல்லவிதமாகக் குடும்பம் நடத்துவார் என்பதை உறுதி செய்த பின்பு, பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுத்தால் பெண்ணும் பெற்றோரும் பின்னாளில் கண் கலங்க வேண்டியதில்லை. பணத்திற்கும் வசதிக்கும் ஆசைப் பட்டு அவன் குடிகாரனாக, மற்ற பெண் களுடன் தொடர்பு கொண்டுள்ளவனாக இருந்தால் பெண்ணின் வாழ்க்கை நாசமாகும்.

இப்படித் தீர விசாரித்து நடைபெறும் திருமணங்களே சிலசமயம், பெண்ணிற்கு இன்பத்தைத் தராமல் துன்பத்தைத் தருவதாக அமைந்து விடுவதும் உண்டு. அதனால் இன்றைய சூழ்நிலையில் இளைஞர்கள் காதல் வசப்பட்டு, எதையும் பாரமால் கண்டதே கோலம், கொண்டதே காட்சி என்று காதல் மயக்கத்தில் பெற்றோரும் வேறு வழியின்றிச் சம்மதித்து நடைபெறுகின்ற திருமண வாழ்க்கைச் சரியாக அமைவதில்லை தான்.

இன்று கல்வித்துறை வியாபாரமாகி விட்டது. காமராஜரின் இலவசக் கல்வித் திட்டம் காணாமல் போய் விட்டது. கல்வி நிறுவனங்கள் பெற்றோரைக் கசக்கிப் பிழிந்து, எக்கச்சக்கமாகப் பணத்தைக் கறந்து விடுகிறார்கள்.

குறிப்பிட்ட கல்வி நிலையங்களைத் தான் தேர்ந்தெடுத்து அதில் நம் பிள்ளையைச் சேர்க்க வேண்டும் என்று பெற்றோர் ஆலாயப் பரப்பது தான் இதற்குக் காரணம்.

பிளஸ்டு படிப்பை முடிக்கவே பெருந் தொகை செலவிட்டு, பின்மருத்துவம், பொறியியல் கம்யூட்டர் என்று மேல் படிப்பு படிக்க மேலும் லட்சக் கணக்கில் பணம் செலவு செய்வதற்குள் பெற்றோர் விழி பிதுங்கத்தான் செய்கிறது.

ஆகவே பெற்றோர் நன்கு திட்ட மிட்டு பள்ளி கல்லூரிகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. பதவியிலிருந்து ஓய்வு பெறும்போது நமது பிற்கால வாழ்விற்குச் சேமிப்பு அவசியமாகிறது. அஞ்சலக டிபாசிட் திட்டம் மற்றும் இந்திர விகாஸ்பத்திரம், அங்கீகாரம் பெற்ற நம்பகமான நிறுவனங்களில் முதலீடு செய்தால் நமது பணம் முதிர்வு காலத்தில் உரிய வட்டியுடன் திரும்பப் பெறலாம். அல்லது மறு முதலீடு செய்யலாம் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு தீரவிசாரிக்காமல் கவர்ச்சிகரமான விளம்பரங்களைப் பார்த்துப் பணத்தை முதலீடு செய்து விட்டு, பின் பணத்தை இழந்து தவிக்கக் கூடாது.

உங்களது திட்டம் சிறியதோ, பெரியதோ அதைப் பற்றி நன்கு ஆலோசியுங்கள். விபரம் தெரிந்தவர்களோடு கலந்து பேசுங்கள். புதிதாகத் தொழில் துவங்குமுன் அதற்கான இடவசதி, நிதிஆதாரம், மற்றவசதிகள், எவ்வளவு முதலீடு செய்வது, அதன் உற்பத்தி இலக்கு என்ன, மார்க்கெட்டில் நமது பொருள்கள் எந்த அளவு விலை போகும், என்பதையெல்லாம் தீர ஆலோசித்துப் பின் தொழில் துவங்குதலும் நல்லது. ஆரம்பத்தில் சிறிதாக முதலீடு செய்து, காலப்போக்கில் அதனை அபிவிருத்தி செய்து கொள்ளலாம். ‘நெட் வொர்க் அமைப்பையும் சரியான படி திட்டமிட்டு அமைத்துக் கொள்ள வேண்டும்.

குறித்த நேரத்தில் சரக்கை டெலிவரி செய்வது, காண்டிராக்ட் விஷயத்தில் கவனம், மார்க்கெட் நிலவரங்களை அவ்வப்போது கவனித்து, அதற்கு ஏற்ப தனது நிறுவனத்தின் உற்பத்தித் திறனைப் பெருக்குவது போன்று அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை.

சரியான நேரத்தில் சரியான முடிவு எடுப்பது, பிரச்சனைகள் வரும் போது அதனைச் சமாளிக்கும் திறன், போட்டி நிறுவனங்களைப் பற்றிய முழு அளவு தெரிந்திருத்தல், விளம்பரம், வாடிக்கையாளரிடம் சரியான பரிவர்த்தனை இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் கவனம் தேவை.

இன்று டி.வி.எஸ், ஸ்ரீராம் குருப், டாடா பிர்லா, அம்பானி, பஜாஜ் போன்ற நிறுவனங்கள் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந் துள்ளதற்கு அவற்றின் சரியான திட்டமிடுதலும், முறையான நிர்வாகமும் தான் காரணம்.

ஆக, திட்டமிடுதல் என்பது இன்று மிக,மிக அவசர அவசியமாகிவிட்டது.

ஆக்கம்: சகோதரர் G.R. சுப்புரமண்யன்

நன்றி : தன்னம்பிக்கை இணையதளம்


0 கருத்துகள்:

ராஜகிரி Copyright © 2011 is Designed and Developed by rajaghiri.online