ராஜகிரி :பாபநாசத்தில் 9 வீடுகள் தீக்கிரை
ராஜகிரி :பாபநாசத்தில் 9 வீடுகள் தீக்கிரை
ஆக 3: தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் செவ்வாய்க்கிழமை மதியம் ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது வீடுகள் எரிந்து நாசமாயின.
பாபநாசம் குடமுருட்டி ஆற்று லயன்கரை அம்மன் நகரில் வசித்து வருபவர் பிச்சை. இவரது மகன் கோவிந்தராஜ். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மதியம் இவரது கூரை வீட்டில் தீப்பிடித்து அருகிலிருந்த சுதந்திரஹாசன் மனைவி முருகேஸ்வரி, கணேசன் மனைவி மங்களம், சுந்தர்ராஜன் மனைவி அஞ்சலை, அசோகன் மனைவி ஜயந்தி, அப்துல்அலி மனைவி நஜிமுன்னிஷா, சம்சுதீன் மனைவி ஹபீப் அம்மாள், குழந்தைசாமி மனைவி லட்சுமி, ராமமூர்த்தி மனைவி மகாலட்சுமி உள்ளிட்டோரின் கூரை வீடுகளுக்கும் பரவியது.
இந்த விபத்தில் 9 பேரின் வீடுகளிலிருந்த அனைத்துப் பொருள்களும் எரிந்து சாம்பலாயின. சேதத்தின் மதிப்பு ரூ. 2 லட்சம் இருக்கும் எனவும், மின் கசிவே விபத்துக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து தகவலறிந்த கும்பகோணம் மற்றும் பாபநாசம் தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
சம்பவ இடத்திற்கு பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் இரா. துரைக்கண்ணு, பாபநாசம் ஒன்றியக்குழுத் தலைவர் சி. சேதுராமன், பாபநாசம் வட்டாட்சியர் சக்திவேல், மண்டல துணை வட்டாட்சியர் பிச்சைபிள்ளை, வருவாய் அலுவலர் பழனிசாமி, கிராம நிர்வாக அதிகாரி ஜி. ஜெயராமன், பாபநாசம் காவல் துறை ஆய்வாளர் சுரேஷ்பாபு உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறினர்.
தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு பாபநாசம் வட்டாட்சியர் சக்திவேல் அரசின் நிவாரண உதவிகளை வழங்கினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக