ராஜகிரி:வட்டாரப் போக்குவரத்து (RTO OFFICE )அலுவலகத்தை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு
ராஜகிரி:வட்டாரப் போக்குவரத்து (RTO OFFICE )அலுவலகத்தை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு
கும்பகோணம் நகரப் பகுதியில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை இடமாற்றம் செய்ய பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.
கும்பகோணம் நகரின் மையப் பகுதியில் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் (வட்டாரப் போக்குவரத்து பதிவு அலுவலகம்) இயங்கி வந்தது. இந்த அலுவலகத்தை கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் வட்டங்களைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
பின்னர், இந்த அலுவலகத்தை தரம் உயர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, 2008-ல் வலங்கைமான் வட்டத்தையும் கும்பகோணம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக எல்லையுடன் இணைத்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலகமாகத் தரம் உயர்த்தி, தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.
இதையடுத்து, கும்பகோணம்- மயிலாடுதுறை பிரதான சாலையில் பாக்கியலட்சுமி நகரில் கடந்த 3 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த அலுவலகம் மூலம் நாள்தோறும் சுமார் ரூ. 4.75 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரையிலும் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது.
நாளொன்றுக்கு லட்சக்கணக்கில் வருவாய் கிடைத்தும், சொந்த இடம் இல்லாததால், வாடகைக் கட்டடத்திலேயே அலுவலகம் இயங்கி வருகிறது.
இந்நிலையில், இந்த அலுவலகத்தை நகரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள ஆரியப்படையூர் ஊராட்சிக்குள்பட்ட தென்னூர் கிராமத்துக்கு இடம்மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நகரின் மையப் பகுதியில் இந்த அலுவலகம் இயங்கி வருவது உள்ளூர், வெளியூரிலிருந்து வரும் பொதுமக்களுக்கும், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கும் பல்வேறு வகைகளில் உதவியாக இருக்கிறது.
எனவே, இந்த அலுவலகத்தை இடமாற்றம் செய்ய பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள், வாகன உபயோகிப்பாளர்கள், வாகன உரிமையாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்த நடவடிக்கையைக் கண்டித்து சுவரொட்டிகள் ஒட்டி, ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை இடம் மாற்றம் செய்ய எதிர்ப்புத் தெரிவித்து முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோருக்கு கோரிக்கை மனு அனுப்பிய எக்ஸ்னோரா மாநில இயக்குநர் பி. சௌரிராஜன் இதுகுறித்து கூறியது: கும்பகோணம் நகரில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள குக்கிராமத்துக்கு மாற்றுவதால், அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படுவர்.
சாலை வசதி, போக்குவரத்து வாகன வசதி இல்லாத காரணத்தால் தென்னூர் கிராமத்தில் உள்ள கட்டடம் கடந்த 11 ஆண்டுகளாகப் பூட்டியே கிடக்கிறது. மேலும், அந்த கிராமத்துக்குச் செல்லும் வழியில் 2 ரயில்வே கிராஸிங்குகள் வருகின்றன. இதனால், கனரக வாகனங்கள் அங்கு சென்று வருவதில் சிரமம் உள்ளது.
மேலும், அதிக பணப் புழக்கம் இருக்கும் அலுவலகம் நகரப் பகுதிக்குள் இருப்பதே பாதுகாப்பானதாக இருக்கும். பாதுகாப்பு உள்ளிட்ட எந்த வசதியும் இல்லாத கிராமப் பகுதிக்கு அலுவலகத்தை இடம் மாற்றும் முயற்சி அரசியல் லாபத்துக்காக மேற்கொள்ளப்படுவதாகவே கருத வேண்டியுள்ளது.
ஏற்கெனவே தென்னூர் கிராமத்துக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை இடமாற்றம் செய்யும் முயற்சி, பொதுமக்களின் கடும் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. இந்நிலையில், போக்குவரத்துத் துறை ஆணையர் மூலம் புதிதாக ஆணை வெளியிட்டு, இந்த அலுவலகத்தை இடம் மாற்றும் முயற்சி சட்டத்துக்குப் புறம்பானது.
அனைத்துத் தரப்பினர் சார்பிலும் இடம் மாற்றம் செய்யும் முயற்சியைக் கைவிடுமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறோம். இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யவுள்ளோம் என்றார் சௌரிராஜன்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக