வெற்றிக்கு வழிகள் - பகுதி-4 - வெற்றிக்கு தேவை பொறுப்பு
வாழ்க்கையில் வெற்றிபெறுவதாகட்டும்; எடுத்துக்கொண்ட காரியங்களில் வெற்றி பெறுவதாகட்டும்; வெற்றிக்குத் தேவை, ஏகப்பட்ட விஷயங்கள். அவைகளுள் முக்கியமான ஒன்றுதான் பொறுப்பு.
பொறுப்பு என்பது சுமத்தப்படுவதும் உண்டு. நாமே விரும்பி ஏற்றுக்கொள்வதும் உண்டு. எப்படியிருந்தாலும் தனக்குள்ள பொறுப்புகளுக்கு, ஒருவன் முக்கியத்துவமும் முன்னுரிமையும் கொடுத்து விட்டால், அவன் வெற்றிப் பாதையில் கால் பதித்து விட்டான் என்றுதான் அர்த்தம்.
பெற்றோர், தங்கள் பிள்ளைகளை, பெரும் கனவுகளுடன், பற்பல சிரங்கள் பட்டு, பணத்தையும் செலவு செய்து, பள்ளியில் சேர்க்கிறார்கள். படிப்பதற்கான வசதிகளை வீட்டில் செய்து தருகிறார்கள். சென்று வருவதற்கு வாகனத்தையும் ஏற்பாடு செய்கிறார்கள்.
இவ்வளவுக்கும் பிறகு அதிக மதிப்பெண்கள் வாங்கி, முதல் மாணவனாக விளங்கி, பெற்றோருக்குப் பெருமை சேர்க்கும் பொறுப்பு பிள்ளைகளுக்கு உண்டா, இல்லையா? முதல் மாணவனாக விளங்காவிட்டாலும், முதல் பத்து மாணவர்களில் ஒருவனாகவாவது விளங்க வேண்டாமா?
அந்தப் பொறுப்பினை உணர்ந்த மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துகிறார்கள். வெற்றியடைகிறார்கள். பொறுப்பை மறந்தவர்கள் சினிமாக் கொட்டகைகளிலும், பெண்கள் கல்லூரி வாசலிலும் நேரத்தைச் செலவிடுகிறார்கள்; மற்றும் உல்லாசமான பல பொழுதுபோக்குகளில் மனதைச் செலுத்திவிடுகிறார்கள்.
கல்யாணத்திற்கு முன், கவலையற்றுத் திரிந்த இளைஞன், கல்யாணமானவுடன் சற்றே பொறுப்பை உணர்கிறான். குழுந்தைகளும் பிறந்து குடும்பம் என்று ஆனவுடன், குடும்பத் தலைவன் என்று பொறுப்பு வந்து விடுகிறது.
அந்தப் பொறுப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறவனுடைய வீடு, நிமிர்கிறது; வளர்கிறது; செழிக்கிறது. பொறுப்பை உணராத குடும்பத் தலைவனாக இருந்து விட்டால், அவனுடைய பிள்ளைகளைதான் தானே முயன்று முன்னேற வேண்டியிருக்கிறது. அல்லது தகுந்த ஆதரவும் வழி காட்டுதலும் இல்லாத காரணத்தால் வறுமையிலிருந்து விடுபட முடியாமல், சராசரிக்கும் கீழான ஒரு வாழ்க்கையில் அவர்கள் உழல வேண்டியிருக்கிறது.
தொழில் நிறுவனங்களில், சேர்மன், பிரஸிடென்ட், டைரக்டர் போன்ற பெரிய பதவிகளில் இருப்போருக்கு, தலைக்கு மேல் நூறு பொறுப்புக்கள் இருக்கின்றன.
பொறுப்பை உணர்ந்து, அதற்கேற்றபடி திட்டங்கள் தீட்டி, தீவிரமாய் உழைக்கும் நிர்வாகிகளால்தான் நிறுவனங்கள் பெரிய அளவில் வளர்ச்சி காண்கின்றன. பொறுப்புணர்ந்து செயல்பட்டு தங்களுக்கிட்ட இலக்குகளைத் தொட்டும் தாண்டியும் காண்பிக்கிறபோதுதான், ஊழியர்களும், தங்கள் நிலையிலிருந்து படிப்படியாகப் பதவி உயர்வு பெற்று மேல்மட்டத்துக்குச் செல்ல முடியும்.
நிறுவனங்களைப் பற்றிச் சொல்லும் போது, முழுமைத்தர மேலாண்மை – Total Quality Management (TQM) என்ற ஒரு விஷயத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். இந்த TQMன் அடிப்படைத் தத்துவம் என்ன?
உற்பத்தியாகும் பொருளின் தரச்சிறப்பு பற்றிய உணர்வு – Quality consciousness- அந்தப் பொருளோடு சம்பந்தபட்ட அனைவருக்குமே, முழுமையாக இருக்க வேண்டும் என்பது தான்.
அவரவர்களுக்கு உள்ள பொறுப்பை முழுமையாக உணர்ந்து, அதைப் பழுதின்றி நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் TQM. அதாவது, உற்பத்திப் பிரிவினர் உற்பத்தி செய்கிறார்கள்; தரக்கட்டுப்பாடு பிரிவினிர் (Quality control section ), பொருள்களை சோத்தித்து, அனுமதிக்கிறார்கள் அல்லது நிராகரிக்கிறார்கள் என்றால் அது TQM அல்ல.
உற்பத்தியாகும் எந்த ஒரு பொருளும் எந்தக் காரணத்துக்காகவும் நிராகரிப்புக்கு உள்ளாகக் கூடாது என்ற உறுதியான தீர்மானத்தோடும் மிகுந்த கவனத்தோடும் சம்பந்தபட்ட எல்லா இலாக்காக்களுமே (Departments) செயல்படவேண்டும் என்பதே TQM.
இன்னும் சொல்லப்போனால், மூலப்பொருள்கள் வாங்கப்படும் நிலையிலேயே, மிகுந்த பொறுப்பும் கவனமும் எடுக்கப்பட்டு மூலப்பொருள்கள் காரணமாகக் கூட, நிராகரிப்பு என்ற நிலையே வரக்கூடாது என்பதும் TQMல் அடக்கம்.
அனைத்துப் பிரிவுகளில் இருக்கும் எல்லா ஊழியர்களுக்குமே பொறுப்பு இருந்தால் தான் இது சாத்தியம் அல்லவா?
பொறுப்பைப் பொருத்தவரையில், ஒரு நிறுவனத்தின் சேர்மனும் சரி, ஒரு நாட்டின் தலைவனும் சரி இருவருமே சமம்தான். இவர் ஒரு குறுநில மன்னர். அவர் ஒரு சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தி. அவ்வளவுதான் வித்தியாசம்.
எந்த அளவுக்கு அவர்களின் மனதில், பொறுப்புணர்வு நிறைந்திருக்கிறதோ, அந்த அளவுக்கு அவர்களிடம் தொலைநோக்கு (vision) இருக்கும்.
நிறுவனத்தைப் பற்றிய அல்லது நாட்டு மக்களைப் பற்றிய எதிர்காலக் கவலைகள் (Concern about the future) இருக்கும்.
அதற்கேற்றபடி செயல்திட்டங்கள் (Action plans) இருக்கும்.
முன்னுரிமைகள் (Priorities)இருக்கும்.
நேரக்கட்டுப்பாடு (control over time) இருக்கும்.
பாரபட்சமற்ற பார்வை இருக்கும் (Imparitiality).
இலக்கில் கவனம் இருக்கும் (Focus on the target).
விளைவு – நிறுவனம் அல்லது நாடு செழிக்கும்.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற முத்தான மூன்று வார்த்தைகளை முன் மொழிந்த அண்ணா அவர்கள், முதல் வார்த்தையாக பொறுப்பு என்ற வார்தையையும் சொல்லியிருந்தால்.., நமது நாடு இதைப்போல் இரண்டு மடங்கு வளர்ச்சி கண்டிருக்காலாமோ என்ற எண்ணத்தை தவிர்க்க முடியவில்லை.
உலகிலேயே, பொறுப்பு என்ற சொல்லுக்குச் சரியான உதாரணம் காட்ட வேண்டுமானால், தாயைத்தான் காட்ட வேண்டும்.
கருவைப் பத்து மாதம் கவனமாக வயிற்றில் சுமக்கிறவள் தாய்.
குழந்தை பிறந்தவுடன், பசியறிந்து பால் புகட்டுவது, கழிவகற்றுவது, குளிப்பாட்டுவது, உடை மாற்றுவது, மருந்தளிப்பது என்று பலவகைகளிலும் பாதுகாக்கிறவள் தாய்.
சிறுவன் ஆனவுடன், பாடம் சொல்லித் தருவது, நல்ல பழக்க வழக்கங்கள் சொல்லித் தருவது அறிவூட்டுவது என்று பக்குவமாய் நல்வழி காட்டுபவள் தாய்.
நாட்டுத் தலைவனோ, நிறுவனத் தலைவனோ… தங்கள் பொறுப்பை உணராமல் தவறியவர்கள் ஏராளமானவர்கள். ஆனால், தனது பொறுப்பில் தவறிய தாய் என்று யாரையும் இதுவரை உலகம் கண்டதில்லை.
ஆக, வெற்றிக்கு ஒரு முக்கியத்தேவை பொறுப்பு.
பொறுப்பு நம்மிடம் இருந்துவிட்டால்
சிறப்பு நம்மைத் தேடிவரும்
ஆசிரியர் : தங்கவேலு மாரிமுத்து
நன்றி : தன்னம்பிக்கை இணையதளம்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக