புறக்கணிக்கப்படும் பாபநாசம் புதிய பேருந்து நிலையம்
பாபநாசம் புதிய பேருந்து நிலையத்துக்குள் அனைத்துப் பேருந்துகளும் வந்து செல்ல வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பாபநாசம், அம்மாபேட்டை ஆகிய இரு ஊராட்சி ஒன்றியங்கள் இணைந்த வட்டத் தலைமையிடமாக பாபநாசம் நகரம் உள்ளது. பாபநாசம் நகரில் ஒரு பேருந்து நிறுத்தம் மட்டுமே செயல்பட்டு வந்த நிலையில், பாபநாசம் நகரில் பேருந்து நிலையம் அமைக்கப்பட வேண்டும் என வர்த்தகர்கள் சங்கம் மற்றும் பல்வேறு நலச் சங்கங்கள், ஊர் பொதுமக்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
அப்போதைய அதிமுக ஆட்சியில், பாபநாசம் ரயில் நிலையத்திற்கு மிக அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டு, தஞ்சாவூர், கும்பகோணம், திருவையாறு, அம்மாபேட்டை, திருவாரூர் உள்ளிட்ட நகரங்களை இணைக்கும் வகையில் புதிய பேருந்து நிலையம், கழிவறை மற்றும் சுகாதார வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டு அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிலையில், பேருந்து நிலையத்தைச் சுற்றி 10 கடைகளுடன் கூடிய வணிக வளாகம், பொருள்கள் வைப்பறை, சமையலறை உள்ளிட்டவையும், முதல் தளத்தில் பாபநாசம் பேரூராட்சி அலுவலகம், பேரூராட்சி திருமண மண்டபமும் கட்டி முடிக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.
பேருந்து நிலையத்துக்குள் நகர, புறநகரப் பேருந்துகள் அனைத்தும் வந்து சென்றன. காலப்போக்கில் நேர ஒதுக்கீடு இல்லை, போதிய சாலை வசதிகள் இல்லை என்ற காரணங்களைச் சொல்லி தனியார் புறநகரப் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்லவில்லை.
இதையடுத்து, அரசுப் பேருந்துகளும் பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்வதை அடியோடு நிறுத்திவிட்டன. பல்வேறு அரசியல் அமைப்பினர், நலச் சங்கங்கள், பொதுமக்கள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் தனியார், அரசு புறநகரப் பேருந்துகள் மற்றும் விரைவுப் பேருந்துகள், பாபநாசம் புதிய பேருந்து நிலையத்தை இன்றுவரை புறக்கணித்தே வருகின்றன. சில நகரப் பேருந்துகள் மட்டுமே புதிய பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்கின்றன.
ஆனால், இன்று வரை தனியார், அரசு புறநகர, விரைவுப் பேருந்துகள் தஞ்சாவூர், கும்பகோணம் முக்கிய சாலையையே பேருந்து நிறுத்தமாகப் பயன்படுத்துகின்றன. வெளியூர் செல்லும் அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பக்தர்கள், நோயாளிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பேருந்தில் பயணம் செய்ய மழையிலும், வெயிலிலும் குழந்தைகளுடனும், உடைமைகளுடனும் கால்கடுக்கக் பேருந்திற்காக காத்திருக்கின்றனர்.
எனவே, பயணிகளின் சிரமங்களையும், மன உளைச்சலையும் கருத்தில் கொண்டு, அனைத்துப் பேருந்துகளும் பாபநாசம் புதிய பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து பாபநாசம் பேரூராட்சித் தலைவர் வி.எம்.ஷேக் தாவூது கூறியது:
பாபநாசம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு உள்பட்ட பாபநாசம் புதிய பேருந்து நிலையத்தை மேம்படுத்தும் வகையில், பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்ல வசதியாக அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் 10 லட்சத்தில் திருப்பாலைத்துறை - எத்திராஜிலு நாயுடு சாலை அமைக்கப்பட்டுள்ளது.
பற்றாக்குறையை ஈடுசெய்தல் மற்றும் அடிப்படை வசதிகளை நிறைவு செய்தல் திட்டத்தின் கீழ், மத்திய அரசு நிதி
25 லட்சம் மற்றும் மாநில அரசின் நிதி 15 லட்சம் உள்பட 40 லட்சத்தில் பேருந்து நிலையத்தை சுற்றி சிமென்ட் சாலை அமைத்தல், சுகாதார வளாகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பொதுமக்களின் நலன் கருதி அனைத்துப் பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து செல்ல பேரூராட்சி சார்பிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக