ராஜகிரி : திரு. அப்துல் மாலிக் அவர்களின் திடீர் மறைவு.
ராஜகிரி :
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துபாய் ராஜகிரி சமுக நலப் பேரவை பிரார்த்தனை செய்கிறது.
உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
சவுதி தமிழ்ச் சங்க தலைவர் அப்துல் மாலிக் மறைவுக்கு வளைகுடா தமிழ் அமைப்புகள் இரங்கல் : சவுதி தமிழ்ச் சங்க தலைவர் அப்துல் மாலிக் சனிக்கிழமை மாலை ஜெத்தாவில் மாரடைப்பால் மரணமடைந்தார். அப்துல் மாலிக் மறைவுக்கு வளைகுடாவில் பல்வேறு தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்
அப்துல் மாலிக் தமிழகத்தின் தஞ்சை மாவட்டம் ராஜகிரியைச் சேர்ந்தவர். சவுதி அரேபியாவில் 25 வருடங்களாகப் பணிபுரிந்து வருபவர். முதுநிலைக் கல்வி கற்றவர். டைரக்டர் முறையை சவுதியிலும், சர்வதேச அளவிலும் அறிமுகப்படுத்தியதில் முன்னிலை வகித்தவர்.
ஜித்தா சர்வதேச இந்தியப் பள்ளியின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைவர் ஆவார். சவுதி இந்தியத் தூதரகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளின் கல்விக்குழுவில் அங்கம் வகிப்பவர். இந்திய புனிதப் பயணிகள் நலச்சங்கத்தை ஏற்படுத்தி முதல் ஐந்து ஆண்டுகள் அதன் தலைவராக வகித்து இந்திய ஹஜ் பயணிகளின் குறைகளை போக்க முயற்சிகள் மேற்கொண்டவர்.
ஜித்தா தமிழ்ச் சங்கத்தை துவக்கி அதன் தலைவராக 12 ஆண்டுகள் இருந்தவர். சவுதி அரேபியாவில் உள்ள அனைத்து தமிழ்ச் சங்கங்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து சவுதி தமிழ்ச் சங்கம் ஏற்படுத்த காரணமாக இருந்தவர். திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகி, உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்து வந்தவர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர். இதுமட்டுமல்லாது பல்வேறு விருதுகளையும் பெற்றவர். எழுபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியவர். திரை விலகப்போகுது, புயல்கள் ஓய்வதில்லை, விடைக்கேற்ற வில்லை ஆகிய மூன்று சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டார். அவரது சிறுகதைகள் பல்கலை மற்றும் கல்லூரி மாணவர்களால் ஆய்வு செய்யப்பட்டு எம்.ஃபில் மற்றும் பி.எச்.டி பட்டங்களைப் பெற்றுள்ளனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக