மருத்துவமனைகளும் பொறுப்பற்ற அரசு அதிகாரிகளும்
மருத்துவமனைகள் இருக்கும் இடத்தில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளை பற்றியும் அது எப்படி உதாசீனப்படுத்துகிறது என்பது பற்றியும் இந்த பதிவில் காணலாம்.
மருத்துவமனை என்பது நம் வீட்டை விட சுத்தமாக இருக்க வேண்டும். வயதானவர்கள், குழந்தைகள், தீராத நோயினால் அவதிப்படுபவர்கள் என்று அனைவரும் இருக்கும் இடத்தில் ஒட்டுதல் (infection) ஆகாமல் இருக்க என்ன வழி என்பதை அறிந்து அதன்படி செய்லபட வேண்டும். இன்று பல மருத்துவமனைகள் வியாபார நோக்கத்திற்காக மட்டுமே இயங்குவதால் அவர்களுக்கு இதன் மீதெல்லாம் கவனம் செலுத்த நேரமில்லை/ தோணவில்லை.
மருத்துவமனை கட்ட அனுமதி அளிக்கும் அரசு அதிகாரிகளும், மாநகராட்சி/ நகராட்சி அலுவலர்களும் அனுமதி கேட்கப்படும் இடம் மருத்துவமனைக்கு ஏற்ற இடமா என்பதை ஆராய்ந்து இதனால் மருத்துவமனையில் தங்க இருக்கும் நோயாளிகளுக்கு தொல்லை ஏற்படுமா என்பதை கவனித்து அனுமதி அளிக்க வேண்டும். சமீபத்தில் ஒரு மருத்துவமனையில் நான் கண்டவை என்னை மிகவும் பாதித்தது. மருத்துவமனை பக்கத்தில் திறந்தவெளி மதுக்கடை(அங்கேயே சிறுநீர் கழிப்பது மிகவும் கொடுமை), மருத்துவமனைக்கு பின்னால் திறந்தவெளி சாக்கடை, மருத்துவமனையை சுற்றி மருத்துவமனையின் குப்பையினாலே துர்நாற்றம் அடிக்கும் தன்மை (அதிலும் அவர்கள் உபயோகித்த இரத்தக் கறை படிந்த பஞ்சுகள், துணிகள் என்று எளிதில் நோயை உண்டாக்கும் பொருட்கள்) என்று அந்த இடமே மருத்துவமனைக்கு சற்று பொருத்தமே இல்லாமல் இருக்க பொதுமக்களோ நகரின் மையப் புள்ளியில் இருப்பதால் அல்லது தங்களுடைய மருத்துவர்கள் அறிவுறுத்துவதால், தங்களுக்கு அட்ஜஸ்ட் செய்யகூடியதாக் இருப்பதால் அந்த மருத்துவமனையே தேர்ந்தெடுப்பது மிகவும் வருத்தப்படக் கூடிய விஷயமாக இருக்கிறது.
தினமும் மருத்துவமனையை சுத்தப்படுத்தினாலும் சுத்தப்படுத்த வேண்டிய முக்கிய இடமான கழிவரையை தினமும் சுத்தம் செய்வதில்லை. நாம் துப்புரவுத் தொழிலாளியை அழைத்து சுத்தம் செய்யச் சொன்னால் தினமும் நம்மிடமிருந்து பணம் எதிர்ப்பார்க்கிறார்கள், இவ்வளவுக்கும் அதுவெல்லாம் சாதாரண மருத்துவமனைகள் அல்ல, அதிகமாக வசூலிக்கும் பிரபல மருத்துவமனைகள். இதைப் பற்றி நிர்வாகத்தில் கூறினாலும், சரியான பதில் இல்லை (ஏனெனில் அவர்கள் சம்பளம் குறைவாக கொடுப்பதால் இதையெல்லாம் கண்டுகொள்வதில்லை). இதனால் நோய் எளிதில் குணமாகக்கூடியவர்கள் நீண்ட நாட்களாக மருத்துவமனையில் தங்கியிருக்கக்கூடிய சூழ்நிலைகள் உருவாகிறது. நோயுக்கான நிவாரணத்தை இறைவன் தான் தருகிறான் (‘நான் நோயுற்றால் அவனே எனக்கு சுகமளிக்கிறான்’ -அல்குர்ஆன் 26: 80) என்றாலும் அதற்காக முயற்சியை சரிவர எடுப்பது நம்மீது கட்டாயக் கடமை. எதற்காக நாம் மருத்துவமனை செல்கிறோமோ அந்த நோக்கமே நிறைவேறாமல் நம்முடைய பணமும், நேரமும் வீணாகிக் கொண்டிருப்பது தான் இதில் உச்சகட்டம்.
சுகாதாரத் துறை, நகராட்சி/ மாநகராட்சியில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் இதைப் போன்று நடக்காமல் மருத்துவமனை கட்டும் விதிகளை பேண வேண்டும். மருத்துவர்கள் இதை போன்ற மருத்துவமனைகளை ஊக்கப்படுத்தாமல் நல்ல சுகாதாரமான இடத்தில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனைகளை பரிசீலனை செய்ய வேண்டும். மாதம் ஒருமுறை அல்லது ஏதாவது காலக்கெடு வைத்து மருத்துவமனைகளை பரிசோதிக்க வேண்டும், மருத்துவமனைகள சுத்தமாக இருக்கிறதா? மருத்துவமனையை சுற்றி இருக்கும் இடங்களின் நிலைமை என்ன என்பதை கண்கானிக்க வேண்டும். அரசு இந்த விஷயத்தில் அக்கறை செலுத்தினால் தான் பொதுமக்கள் நலமாக, வளமாக/ ஆரோக்கியமாக வாழ முடியும்.
"வரப்புயர நீர் உயரும்,
நீர் உயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
குடி உயர கோன் உயர்வான்"
என அவ்வையார் பாடியிருந்தார்.
குடி உயர கோன் உயர்வான் என்ற கூற்றுப்படி குடிமக்கள உயர வேண்டுமென்றால் கலர் டிவியும், ஒரு ரூபாய் அரசியும், மக்களை சோம்பேறிகளாக மற்றும் இலவசங்களை கொடுத்தால் மட்டும் போதாது என்பதை அரசு உணர வேண்டும்.
மக்களாகிய நாமும் இத்தகைய மருத்துவமனைகளை புறக்கணித்தாலே அவர்கள் வழிக்கு வந்துவிடுவர். மருத்துவமனைகள் என்பது பல அசௌகரியங்கள் கொண்டது, அதையெல்லாம் தாங்கிக் கொண்டால் தான் உடல் பூரன குணமடையும். வசதிகள் குறைவாக இருக்கிறது என்பதற்காக இதை போன்ற சுத்தம்/சுகாதரம் இல்லாத மருத்துவமனைகளை தேர்ந்தெடுத்தால் நமது பணம், நேரம் வீணாவதோடு நோயாளிகளின் நலனும் கேள்விக்குறியாகிவிடும் என்பதை கவனித்துக் கொள்ள வேண்டும்.
படம்: கூகிள்
தோழமையுடன்
அபு நிஹான்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக