ராஜகிரி முஸ்லிம் சமுதாயத்தினர் இடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ராஜகிரி, அக். 4: ராஜகிரி முஸ்லிம் சமுதாயத்திற்குச் சொந்தமான இடத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
ராஜகிரி பகுதியில் 160 முஸ்லிம் குடும்பங்களுக்குச் சொந்தமான சமுதாய இடம் உள்ளது. இந்த குடும்பங்களில் உள்ளவர்களில் பலர் இறந்துவிட்டனர். ஒரு சிலர் கட்டுப்பாட்டில்தான் இந்த இடம் நிர்வகிக்கப்பட்டு வந்தது
இந்நிலையில், அருகிலுள்ள காமராஜ் நகரைச் சேர்ந்த சிலர், அந்த இடத்தில் 39 குடிசை வீடுகள் கட்டி ஆக்கிரமித்திருந்தனர்.
இவர்களை அப்புறப்படுத்தக் கோரி சென்னை கிளை மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதில், முஸ்லிம் சமுதாயத்திற்கே அந்த இடம் சொந்தமானது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. எனினும், ஆக்கிரமிப்பாளர்கள் அங்கிருந்து குடிசைகளை அப்புறப்படுத்தவில்லை.
இதைத் தொடர்ந்து, கும்பகோணம் கோட்டாட்சியர் செங்குட்டுவன் தலைமையில், பாபநாசம் வட்டாட்சியர் பி. குணசேகரன், மண்டல துணை வட்டாட்சியர்கள் பாஸ்கரன், பிச்சைப்பிள்ளை, வருவாய் ஆய்வாளர்கள் ஆர். துரைராஜ், ராஜகோபால், மலர்குழலி, கல்யாணசுந்தரம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் ஆகியோர் முன்னிலையில் புல்டோசர் மூலம் 39 வீடுகளும் அப்புறப்படுத்தப்பட்டன.
ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு மாற்று இடத்தில் நிலம் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய் துறையினர் தெரிவித்தனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக